×

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 20 மறுசீரமைப்பு பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.பி. கோயில் (வடக்கு) பகுதியில், சென்னை வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.6.27 கோடி செலவில் பணியாளர்கள் அறைகள், முதலுதவி அறை, பயணிகள் காத்திருக்கும் அறை, கடைகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புனரமைக்கப்படவுள்ள திரு.வி.க. நகர் பேருந்து நிலையப் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலம், தான்தோன்றி அம்மன் கோவில் தெருவில் ரூ.11.30 லட்சம் செலவில் நடைபாதை வசதி, பசுமை புல்வெளி, நீரூற்றுக்கு 20 ஹெச்.பி மோட்டார், இருக்கைகள், மின் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள ஆனந்தன் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதனையடுத்து, திரு.வி.க. நகர் மண்டலம், பூம்புகார் நகர் 4வது குறுக்குத் தெரு பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூலதன பராமரிப்பு நிதியின்கீழ் ரூ.1.26 கோடி செலவில் திரு.வி.க.நகர் 4வது தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம், ஜெய்பீம் நகர் 1வது தெருவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், தீட்டித்தோட்டம் 1வது தெருவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், குருசாமி தெருவில் அமைந்துள்ள ஜார்ஜ் காலனி பூங்கா, சென்னை சதுக்கம், சென்னை 1வது தெருவில் அமைந்துள்ள கென்னடி சதுக்கம் பூங்கா, பல்லவன் சாலையில் அமைந்துள்ள கே.கே.ஆர். அவென்யூ பூங்கா, ஜவஹர் நகர் 5வது பிரதான சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா, மஹாவீர் நகரில் அமைந்துள்ள பூங்கா, அஞ்சுகம் நகர் 4வது தெருவில் அமைந்துள்ள பூங்கா ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள், ராம் நகர் 2வது பிரதான சாலையில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் நடைபாதை அமைத்தல் மற்றும் இதர மேம்படுத்தும் பணிகள், பூம்புகார் நகர் 4வது தெருவில் அமைந்துள்ள பூங்காவிற்கு நடைபாதை நீட்டிப்புப் பணி, பல்லவன் சாலையில் அமைந்துள்ள தாங்கல் மயான பூமியில் எல்.பி.ஜி தகன மேடையாக மாற்றும் பணி, எஸ்.ஆர்.பி. கோவில் வடக்குத் தெருவில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் தரைத்தளத்தில் பாத்திரங்கள் கழுவும் அறை மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி, சுப்பிரமணியபுரம் 2வது தெருவில் உள்ள வார்டு அலுவலகத்தை மேம்படுத்தும் பணி, சீனிவாசா நகர் 3வது தெருவில் அமைந்துள்ள சென்னை தொடக்கப்பள்ளி வளாகத்தில் பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்தும் பணி, அஞ்சுகம் நகர் 18வது தெருவில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை பழுது பார்த்து மேம்படுத்தும் பணி, ஹரிதாஸ் நகர் 1வது தெருவில் அமைந்துள்ள தாமரைக் குளத்தை பழுது பார்த்து மேம்படுத்தும் பணி, காமராஜர் நகரில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை மேம்படுத்தும் பணி, நேர்மை நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை மேம்படுத்தும் பணி, எஸ்.ஆர்.பி. கோவில் வடக்குத் தெருவில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியை மறுசீரமைக்கும் பணி ஆகிய 20 மறுசீரமைப்புப் பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, வீனஸ் எவர்வின் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் டாலி (Tally) பயிற்சி முடித்த 136 மாணவ, மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினிகளையும், தையல் பயற்சி முடித்த 359 பெண்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்களையும் முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, . கிரிராஜன், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரிகள் நரேந்திரன், ஹெலன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 20 மறுசீரமைப்பு பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kolathur assembly ,CHENNAI ,Chennai Kolathur Assembly Constituency S.R.P. ,Koil ,North ,Chennai Development Group ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தினம் வாழ்த்து!